ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை வழங்கினார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா வாபஸ் பெற்றதால், மெஹபூபா முப்தி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. ஜம்மு-காஷ்மீரில் பாரதிய ஜனதா ஆதரவுடன் மக்கள் ஜனநாயாகக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் மெகபூபா தலைமையிலான அரசு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி அக்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா நேற்று விலக்கிக் கொண்டது. பயங்கரவாதம், வன்முறை அதிகரித்துள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கை கூட வாழ முடியாத வகையில் அபாய நிலை இருப்பதாகவும் பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தனது ஆதரவை திரும்பப்பெற்றதால் முதலமைச்சர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை வழங்கினார். இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி உடனடியாக அமலுக்கு வந்தது.