பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனையடுத்து மாநிலங்களவையிலும் 149 உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு கீழ் வீடு உள்ளவர்களை மட்டுமே பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாக கருத மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே 10 சதவீத இடஒதுக்கீட்டு பலனை பெற முடியும்.