குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாய்மாரும் பிரசவத்துக்குப் பின், இன்னொரு பிறவியையே பெறுகின்றனர். காரணம், பிரசவ வலி என்பது சாதாரணமானது அல்ல. இதையெல்லாம் கருத்தில் கொண்டே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கர்ப்பிணிகளுக்கென அவர்களின் பேறுகாலத்தில் சிறப்புச் சலுகைகளை அறிவித்து, அவர்களை கவனித்துக் கொள்கிறது.
அந்தவகையில் அரசு ஊழியர்களாய் இருக்கும் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு, ஊதியத்துடன் 6 மாதம் பிரசவ கால விடுமுறையை இந்திய அரசு வழங்குகிறது. ஆனால் இது நாடு முழுவதும் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காரணம், ஒடிசாவில் அரசு ஊழியர் ஒருவருக்கு, கர்ப்ப காலத்தின்போது விடுமுறை அளிக்கப்படாததால் அவர் தன்னுடைய குழந்தையை இழந்துள்ளார்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் டெராபிஷ் தொகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஊழியராக பணிபுரிந்து வருபவர், பர்ஷா பிரியதர்ஷினி. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். என்றாலும், தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பணிக்கு சென்று வந்துள்ளார். அப்படி கடந்த அக்டோபர் 25ஆம் தேதியும் அவர் பணிக்கு வந்துள்ளார். அன்று அவருக்கு வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது.
அத்தருணத்தில் தன் உயரதிகாரியும் ‘குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி’யுமான (சிடிபிஓ) சிநேகலதா சாஹூவிடம், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி வேண்டியுள்ளார். ஆனால், அவருடைய வேண்டுகோளை சிநேகலதா புறக்கணித்துள்ளார். மாற்று ஏற்பாடும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பர்ஷா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அவர்கள் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் அவரது குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதையும் படிக்க: தொடரும் போர் | ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த ஷேக் நைம் காசிம்?
இதனால் மனவேதனை அடைந்த பர்ஷா, இந்த துயரத்திற்கு சிடிபிஓவிவின் மனரீதியான துன்புறுத்தலும், அவருடைய அலட்சியமுமே காரணம் எனக்கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேந்த்ராபாரா மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
இதுகுறித்து கேந்த்ராபாரா கூடுதல் மாவட்ட ஆட்சியர் நிலு மஹாபத்ரா, "புகார் கிடைத்ததும், மாவட்ட சமூக நல அதிகாரி (DSWO) இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள துணை முதல்வர் பிரவதி பரிதா, “இந்த சம்பவம் குறித்து கேந்திரபாரா கலெக்டருடன் விவாதித்துள்ளேன். உடனடியாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கேந்திரபாரா DSWO மனோரமா ஸ்வைன், "இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். அதன்பிறகு எங்கள் அறிக்கையை சமர்பிப்போம்" எனப் பதிலளித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்த சிடிபிஓ சிநேகலதா சாஹூ, "பர்ஷாவின் வலி குறித்து எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஹைதராபாத் | இறந்துபோன மகன்.. தெரியாமலேயே 4 நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்!