ஏழை ஜோடிகளுக்கு அரசு சார்பில் நடத்தப்பட்ட திருமணத்தின் போது மணப்பெண்களுக்கு அவர்கள் கருத்தரித்துள்ளனரா என கண்டறிய கர்ப்ப பரிசோதனை நடத்தியிருக்கிறது மத்திய பிரதேச அரசு. இது பெரும் சர்ச்சையாக வெடித்ததோடு, அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸூம் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தலைமையில் ‘முக்கிய மந்திரி கன்ய விவாஹ யோஜனா’ என்ற திட்டத்தின் பேரில் 219 ஏழை ஜோடிகளுக்கு திண்டோரியில் உள்ள கட்சராய் என்ற பகுதியில் திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்களுக்கு ரத்த சோகை, உடற்தகுதி போன்றவற்றோடு கர்ப்ப பரிசோதனையையும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அப்போது ஐந்து பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும் திருமணம் நடத்துவதற்கான பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியிருக்கிறார்கள். இது குறித்து பேசியுள்ள திண்டோரியின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியான ரமேஷ் மராவி, “உயரதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே சந்தேகத்திற்குரிய மணப்பெண்களுக்கு இந்த கர்ப்ப பரிசோதனைகள் நடத்தப்பட்டன” என்றிருக்கிறார்.
அதேவேளையில் கருவுற்றிருப்பது உறுதியான பெண்களில் ஒருவர் கூறுகையில், “நான் திருமணத்துக்கு முன்பே எனது வருங்கால கணவருடன் வாழத் தொடங்கிவிட்டேன். ஆகவே எனது கர்ப்ப பரிசோதனை நேர்மறையாக வந்தது. இதனால் என்னை பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்” என தெரிவித்திருக்கிறார். இதனிடையே பேசிய மற்ற சிலர், “இப்படியான நிலை இதற்கு முன்பு நேர்ந்ததில்லை. திருமணத்தின் போது கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதால் எங்கள் பெண்களுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் அவமானமே மிஞ்சியது” என வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “திருமணம் நடத்தப்பட இருந்த 200க்கும் மேலான ஏழை பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்திய செய்தி உண்மையா? அவ்வாறு இருப்பின், யார் உத்தரவின் பேரில் மத்திய பிரதேசத்தின் மகள்களுக்கு இந்த கொடூர அவமதிப்பு செய்யப்பட்டது? ஏழை, பழங்குடியின மகள்களுக்கெல்லாம் முதல்வரின் பார்வையில் கண்ணியம் என்பதே இல்லையா?
ஏற்கெனவே சிவ்ராஜ் சிங் ஆட்சியால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ம.பி முதலிடத்தில் இருக்கிறது. ஆகையால் இந்த விவகாரத்தில் நேர்மையான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும். இதனை கர்ப்ப பரிசோதனையாக மட்டுமல்லாமல் பெண்கள் மீதான தீங்கான அணுகுமுறையாகவும் பார்க்கவேண்டும்” என கடும் காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த திருமண திட்டத்திற்காக பொருளாதார ரீதியில் நலிவடைந்த பெண்களுக்கு மாநில அரசு சார்பில் 56,000 ரூபாய் நிதி வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.