ஆதார் எண்ணை ஆன்லைனில் ஷேர் செய்யும்போது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கூறியுள்ளது.
தற்போது ஆதார் கார்டு எல்லா இடங்களில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் எண் இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள். ஆதார் எண்ணின் தேவை இப்படி ஒருபுறம் அதிகரிக்க, மறுபுறத்தில் ஆதார் கார்டில் அளிக்கப்பட்ட தகவல்களை, மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆதார் ஆணையத்தில் இருந்து எளிதில் ஆதார் தகவல்களை எடுக்க முடியும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தியாவில் உள்ளவர்களின் ஆதார் தகவல்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது என்ற செய்தியும் வெளியாகி இருந்தது நினைவில் இருக்கலாம்.
இந்த நிலையில், ஆதார் தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்த வாய்ப்பேயில்லை என்று ஆதார் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இணையதளங்களில் பல்வேறு சேவைகளுக்காக ஆதார் உள்ளிட்ட தனிநபர்களின் தகவல்களை பதிவு செய்யும் போது, அதனை தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.