ஆந்திராவின் அறியப்படாத முகம்; ஜெகனின் நம்பிக்கை...- 'அதிகார சர்ச்சை'யில் பிரவீன் பிரகாஷ்!

ஆந்திராவின் அறியப்படாத முகம்; ஜெகனின் நம்பிக்கை...- 'அதிகார சர்ச்சை'யில் பிரவீன் பிரகாஷ்!
ஆந்திராவின் அறியப்படாத முகம்; ஜெகனின் நம்பிக்கை...- 'அதிகார சர்ச்சை'யில் பிரவீன் பிரகாஷ்!
Published on

ஆந்திராவின் புதிய தலைமைச் செயலாளராக 1987 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆதித்யா நாத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய தலைமைச் செயலாளர் சாவ்னி டிசம்பர் 31-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதால் புதிதாக ஆதித்யா நாத் தாஸ் நியமிக்கப்படுகிறார் என்று ஆந்திர அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நாம் பார்க்கப்போகும் செய்தி இவர்களைப் பற்றி கிடையாது. ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளரை நீக்கக்கூடிய ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பற்றி நீங்கள் யோசிக்க முடியுமா?. அதுவும், அந்த தலைமைச் செயலாளர் அதிகாரம் படைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியைவிட 11 ஆண்டுகளுக்கு பின்பு ஐ.ஏ.எஸ் ஆக சேர்ந்தவர் என்றால், அது நடக்குமா? நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் அதிகாரம் படைத்த ஐஏஎஸ் அதிகாரியை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

ஜெகன் மோகன் ரெட்டியின் முதல்வர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றி வரும் 1994-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரவீன் பிரகாஷ் மேலே சொன்ன காரியத்தை ஒரு வருடத்திற்கு முன்பு செய்தார். ஆந்திர முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் அரை டஜன் ஆலோசகர்களுக்கு மிகவும் இளையவர் இந்த பிரவீன் பிரகாஷ். ஆனால், மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் பிரவீன் பிரகாஷ் ஒரு `சூப்பர் பவர்' ஐஏஎஸ் அதிகாரி. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதன்மை செயலாளர், மாநிலத்தின் அனைத்து மூத்த நியமனங்களையும் கட்டுப்படுத்தும் முக்கியமான பொது நிர்வாகத் துறையின் (ஜிஏடி) செயலாளர் என்ற இரண்டு முக்கியமான பதவிகள் பிரவீன் பிரகாஷ் வசம்தான் இருக்கிறது. இவரே மாநிலத்தின் அனைத்து முக்கியமான முடிவுகளையும் எடுக்கிறார் என்கிறது ஆந்திர அரசு வட்டாரம்.

அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிரவீன் பிரகாஷ். ஐ.ஐ.டி-கான்பூரில் பட்டம் பெற்றவர். பிரகாஷ் எப்படி ஆந்திர மாநிலத்தின் மிக சக்திவாய்ந்த நபராக வலம் வருகிறார், அவருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது எல்லாம் ஒரு சம்பவத்துக்கு பின்புதான். மாநில குடியுரிமை ஆணையராக இரண்டு ஆண்டுகள் பிரகாஷ் டெல்லியில் மத்திய அரசு பணியில் இருந்து வந்தார். (இப்போது அந்த பதவியை பிரகாஷின் மனைவி பாவ்னா சக்சேனா வகிக்கிறார்) 2019-ல் முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ஒருமுறை டெல்லி செல்லும்போதுதான் இருவரும் முதல்முறை சந்தித்துக்கொண்டனர்.

அந்தச் சந்திப்பின்போது இருவரும் சில மணிநேரங்கள் பேசிக்கொண்டனர். அப்போது, ``நான் ஒருபோதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நன்கு அறிந்திருக்கவில்லை, ஆனால் எனது அனுபவத்தில், நாம் விரும்புவதில் 30 சதவீதம் மட்டுமே அதிகாரிகளால் செய்யப்படுகிறது. அது ஏன்?" என ஜெகன் பிரகாஷிடம் கேள்வி கேட்க, அதற்கு, ``நீங்கள் இரண்டு காரியங்களைச் செய்யாவிட்டால் எதுவும் வேலைக்கு ஆகாது. ஒன்று, அளவிடக்கூடிய இலக்குகளை அமைத்தல். இரண்டு, கண்காணிப்புடன் கூடிய விடாமுயற்சி. இந்த இரண்டையும் ஒரு ஆட்சி நடத்த கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதை எனது நிர்வாக அனுபவம் மூலம் கற்றுக்கொண்டேன்" என்று ஜெகனுக்கு இரண்டு அட்வைஸ்களை பிரகாஷ் கொடுத்ததாக அவரே 'தி பிரின்ட்'-க்கு ஒரு முறை பேட்டி கொடுத்துள்ளார்.

இதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே, தனது முதன்மைச் செயலாளராக சேரலாமே என்று பிரகாஷுக்கு ஜெகன் சிவப்பு கம்பளம் விரிக்க, அடுத்த சில மாதங்களிலேயே பிரகாஷை தனது முதன்மை செயலாளராக அறிவித்து ஆச்சர்யம் அளித்தார். `தங்கள் இருவருக்கும் இடையே, ஒரு கெமிஸ்ட்ரி இருப்பதாக நெகிழ்கிறார் பிரகாஷ். அவர் கூறியது போலவே, ஜெகனின் முழு நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் பிரகாஷ்.

ஜெகனின் செல்ல அதிகாரி!

ஆந்திராவுக்கு பிரகாஷ் வந்ததிலிருந்து, ஜெகனின் செல்ல அதிகாரியாக அவரின் அந்தஸ்து பெருகி கொண்டே இருக்கிறது. ஜெகனின் முதல்வர் அலுவலகம் பல ஆலோசகர்களால் நிரம்பியிருந்தாலும் பிரகாஷுடன் ஒப்பிடும்போது பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே உள்ளது என்பது மாநில அதிகாரிகள் பலரின் கவலை. இதற்கு ஓர் உதாரணம்: இந்த ஆண்டு ஜூலையில் தனது ஆலோசகர்கள் இருவரை அதிரடியாக நீக்கம் செய்த ஜெகன், அவர்களின் பொது நிர்வாகம், வீடு, வருவாய், நிதி மற்றும் சட்ட விவகாரங்கள் போன்ற இலாக்காகளை பிரகாஷுக்கு கூடுதலாக ஒதுக்கினார். இந்தப் பதவிகள் மட்டுமல்ல, மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை கையாள்வது, பிரதமர், பிற மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் அல்லது அரசியலமைப்பு அதிகாரிகளின் உறவுகளை கையாள்வது போன்ற பொறுப்புகளையும் கவனித்து கொள்வது பிரகாஷேதான்.

``ஏதாவது செய்ய வேண்டும் என்று முதல்வர் விரும்பினால், பிரகாஷ் ஒரு மணி நேரத்திற்குள் அதற்கான உத்தரவுகளை வெளியிடுவார். எந்த ஆலோசனையும் இல்லை, அதன் தாக்கங்கள் குறித்து விவாதங்களும் இல்லை. முதல்வர் விரும்பினால், பிரகாஷ் அதை செய்து முடிப்பார்" என்று ஜெகன் பிரகாஷை பெரிதும் நம்பியிருப்பதற்கான காரணம் என்னவென்பதை, பெயர் குறிப்பிடாத ஒரு மூத்த அதிகாரி இப்படியாக குறிப்பிடுகிறார். பிரகாஷின் ``யெஸ் பாஸ்'' அணுகுமுறை அவரை ஜெகனிடம் மிக நெருங்க வைத்திருக்கிறது என்பதே அவரின் அலுவலக அதிகாரிகள் பெரும்பாலோனோர் சொல்வது.

தலைமைச் செயலாளர், பிரகாஷ் என இரு அதிகார தலைமைகள் இருப்பது அதிகாரிகள் மத்தியில் யாரை பின்பற்றுவது என்பது குழப்பமாகவே இருக்கிறது. அதிலும், பிரகாஷின் செல்வாக்கு மற்றும் ஜெகனுக்கு அவர் நெருக்கமாக இருப்பது, மற்ற துறைகளின் அதிகாரத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்து வருகிறது. நவம்பர் 2019-ல் அப்போதைய ஆந்திர மாநில தலைமைச் செயலாளராக இருந்த எல்.வி சுப்ரமண்யம், அமைச்சரவைக் கூட்டத்தில் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஜிஏடி செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் பிரகாஷ் நோட்டீஸ் பெற்ற மூன்று நாளில் சுப்ரமண்யத்தை பதவியை விட்டு தூக்கினார் ஜெகனின் ஒப்புதல் உடன். இது சர்ச்சையாக உருவெடுத்தது. இப்படி பலமுறை இரட்டை பதவி சர்ச்சை, அதிகார துஷ்பிரயோக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

எவ்வாறாயினும், அதிகாரத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை பிரகாஷ் மறுக்கிறார். ``அரசாங்கத்தில் இரண்டு பதவிகளை வகிப்பதற்கான காரணம், 2014-ல் ஆந்திராவை இரண்டாகப் பிரித்ததே ஆகும், ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல அதிகாரிகள் அன்றிலிருந்து பல பதவிகளை வகிக்க வேண்டியுள்ளது" எனக் கூறும் பிரகாஷ், ``முதன்மைச் செயலாளர் என்ற முறையில் ஒரு வேலையில் இறுதி வடிவத்தை மட்டுமே நான் கொடுக்கிறேன். அனைத்து வேலைகளும் அந்தந்த துறைகளின் செயலாளர்களால் செய்யப்படுகின்றன, மேலும் முதல்வர் அவர்களின் ஆலோசனையை நம்பியுள்ளார்" என்றும் விளக்கம் கொடுக்கிறார்.

ஆனால், ஆந்திராவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ண ராவ், ``முதல்வர் அலுவலகத்தின் ஒரு அதிகாரி மாநிலம் முழுவதும் அதிகாரிகளை அழைத்து, உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில், அதிகாரத்துவத்தின் தற்போதைய முறையான கட்டமைப்புகளுடன் ஒன்றிணைக்க முடியாது. ஆந்திராவில் அதுதான் நடக்கிறது. அனைத்து உத்தரவுகளும் முடிவுகளும் முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்தவை. நிர்வாகத்தின் பொதுத் துணிவுக்கு இது நல்லதல்ல" என்று கூறி, முதல்வர் அலுவலக அதிகாரம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த தொடர் சர்ச்சைகளுக்கு நடுவில்தான், தற்போது ஆந்திராவின் புதிய தலைமைச் செயலாளராக ஆதித்யா நாத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Print 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com