மகாபாரத 'பீமன்', தமிழ் சினிமாவில் 'பீம் பாய்' - காலமான அத்லெட் வீரர் பிரவீன் குமார்

மகாபாரத 'பீமன்', தமிழ் சினிமாவில் 'பீம் பாய்' - காலமான அத்லெட் வீரர் பிரவீன் குமார்
மகாபாரத 'பீமன்', தமிழ் சினிமாவில் 'பீம் பாய்' - காலமான அத்லெட் வீரர் பிரவீன் குமார்
Published on

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த ‘மைக்கல் மதன காமராஜன்’ படத்தில், 6 அடி உயர பீம் பாயாக வரும் நடிகர் பிரவீன் குமார் சோப்டி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 74.

1947-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த பிரவீன் குமார் சோப்டி, அடிப்படையில் தடகள விளையாட்டு வீரர் ஆவார். திரையுலகில் நடிகராவதற்கு முன்னர் இவர், சம்மட்டி எறிதல் மற்றும் வட்டெறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசியப் போட்டியில் 4 முறை இந்தியா சார்பில் விளையாடி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். அதேபோல், 1966-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் சம்மட்டி எறிதல் பிரிவில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன்பிறகு, 1968 மற்றும் 1972-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

இதனால் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. தடகள விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை அள்ளி சாதனை புரிந்ததன் மூலம், இவருக்கு, எல்லை பாதுகாப்புப் படையில், துணை கமாண்டர் பதவியும் கிடைத்தது. பின்னர், 1970-ம் ஆண்டுக்குப் பிறகு பிரவீன் குமார், நடிப்புத்துறைக்கு மாறினார். 6.6 அடி உயரம் கொண்ட இவருக்கு, பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘ரட்சா’, ‘மேரி சபான்’, ‘நாக பன்தி’, ‘அதிகார்’, ‘மிட்டி ஆவூர் சோனா’, ‘டக் பங்களா’, ‘பன்னா’ என சினிமா உலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும், 1988-ம் ஆண்டு பி.ஆர். சோப்ராவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், இந்தியில் வெளியான ‘மகாபாரதம்’ என்ற தொடரில் பீமனாக நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இந்நிலையில் இவர், சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், 1990-ம் ஆண்டு வெளியான ‘மைக்கல் மதன காமராஜன்’ படத்தில் 4 கமல்ஹாசன்களில், தொழிலதிபர் கமலஹாசன் மதனுக்கு விஸ்வாசமான வேலைக்காரனாக பீம் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன்மூலம் தமிழ் சினிமாவிலும் நல்ல அறிமுகம் அவருக்கு கிடைத்தது. 

பின்னர் பிரவீன் குமார், கடந்த 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். மேலும், அந்தக் கட்சி சார்பாக டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர், பிரவீன் குமார் ஓரிரு வருடங்கள் கழித்து பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது டெல்லியில் உள்ள அசோக் விஹார் இல்லத்தில் வசித்து வந்த பிரவீன் குமார், நேற்றிரவு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார். பின்னர், மருத்துவர் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், மாரடைப்பால் நேற்றிரவு 10.30 மணியளவில் பிரவீன் குமார் உயிரிழந்துள்ளார். முன்னாள் துணை கமாண்டராக பணி புரிந்த பிரவீன் குமார் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து அஞ்சலி செலுத்துகிறோம் என ட்விட்டர் பக்கத்தில் எல்லை பாதுகாப்புப் படை பதிவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com