ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா கடந்த 15-ம் தேதி திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு சர்வதேச அளவில் கல்வியாளர்கள் தரப்பிலிருந்து ஆதரவு குவிந்து வருகிறது.
'எனது ராஜினாமாவுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் யாவும் எதிர்காலத்திலும் மாறாமல் அப்படியேத்தான் இருக்கும்.' - இது அசோகா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வியாளர் மேத்தா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகள். மேலும், தான் ராஜினாமா செய்யக்கூடாது என ஒற்றுமையுடன் தனக்காக போராடிய மாணவர்களுக்கும் அவர் அந்தக் கடித்தத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.
''அசோகா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களை விட்டு விலகுவது என் வாழ்வின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுவது எளிதான முடிவு அல்ல. ஆனால், என்னை பொறுத்தவரை என்னால் செய்ய முடிந்த கௌரவமான விஷயம் இதுதான்" என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன காரணம் என்பது தொடர்பாக அவர் முழுமையாக விளக்கவில்லை. ஆனால், தான் ராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த நிகழ்வுகளை மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து இந்த விஷயத்தில் மாணவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் குறிப்பிடும்போது, ''நாம் சிக்கலான காலங்களில் வாழ்கிறோம். இந்தியா புதிய விஷயங்களால் எரிந்துகொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்தின் இருண்ட நிழல்கள் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. நம் அனைவருமே அடிக்கடி சங்கடமானதும், நேர்மையற்றதுமான சூழலுக்குத் தள்ளப்படுகிறோம். இந்த நிலையை சமாளிப்பதற்கான கொள்கை ரீதியானதும், புத்திசாலித்தனமானதுமான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் பல்கலைக்கழகத்தின் மீதான எதிர்கால நம்பிக்கை குறித்து குறிப்பிடும்போது, ''உங்கள் நம்பிக்கையை பாதுகாக்க அறங்காவலர்களும், நிர்வாகமும் உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என்று மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.
இதையடுத்து, அசோகா பல்கலைகழகத்தில் பணியாற்றும் சக பேராசிரியரும், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் சுப்பிரமணியனும் இரண்டு நாள்களுக்குப் பிறகு மேத்தாவின் ராஜினாமாவை ஆதரித்தார்.
''இனியும் பல்கலைக்கழகத்திலிருந்து கல்வி, சுதந்திரம், கருத்துரிமைக்கு எந்த முகாந்திரமும் இருக்காது" என அவர் கடுமையாக சாடினார். மேத்தாவின் ராஜினாமாவை எதிர்த்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், பேராசிரியருடனான அவரது பிணைப்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 'மேத்தாவின் ராஜினாமா என்பது வெளிப்புற சக்திகளின் அழுத்தங்களால் நிகழ்ந்தது' என அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யார் இந்த பிரதாப் பானு மேத்தா?
சரி, யார் இந்த பிரதாப் பானு மேத்தா? அவர் ஏன் அசோகா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற வேண்டும்? - இந்தக் கேள்வி மிக முக்கியமானது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர் மேத்தா. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வு படிப்பு முடித்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், நியூயார்க் சட்டப் பள்ளி முதலிய கல்வி நிலையங்களில் பேராசிரியராக பணியாற்றியவர். ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் மாணவர்களின் 'நம்மவர்' ஆகவே இருந்திருக்கிறார் பிரதாப் பானு மேத்தா. எனவேதான், அவருக்காக மாணவர்கள் பகிரங்கமாக குரல் எழுப்பினர்.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் பத்தி ஆசிரியராகவும் இருக்கிறார் மேத்தா. மேத்தா ஒரு கட்டுரையாசிரியரும் கூட. முன்னணி பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தனது கட்டுரைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசை தாக்கியும், விமர்சனங்களை முன்வைத்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். எமெர்ஜென்சியை அமல்படுத்திய இந்திராகாந்தி அரசை விட கொடூரமானது பாஜக அரசு எனவும் சாடியிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து, மத்திய அரசை விமர்சித்தும் கட்டுரை எழுதியிருக்கிறார். இது ஒரு பாசிச அரசு என்று பல இடங்களில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
'அரசியல் சாசன விழுமியங்களான சுதந்திரம், எல்லா குடிமக்களுக்கும் சமமான மரியாதை முதலியவற்றை மதிக்கும் அரசியலை ஆதரித்து பொதுவெளியில் நான் எழுதியது பல்கலைக்கழகத்துக்கு பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடும் என உணரப்பட்டிருக்கிறது' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேத்தாவின் ராஜினாமாவுக்கு அரசியல் அழுத்தங்களின் பின்புலம் காரணமாக இருக்கின்றன என அரசியல் நோக்கர்களும், கல்வியாளர்களும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
- மலையரசு