காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் கர்ஜேவாலா அறிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள், I-PAC நிறுவனரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரஷாந்த் கிஷோருடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். அப்போது 2024 பொதுத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விரிவான விளக்கத்தை பிரஷாந்த் கிஷோர் அளித்தாக கூறிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்பட்ட குழுவால் கிஷோர் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
\
பிரஷாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும் அவர் காங். தலைவர்களுடான கூட்டத்தில் 600 ஸ்லைடுகள் கொண்ட பிபிடியை வைத்து திட்டத்தை விளக்கியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். இருப்பினும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் வியூக வல்லுநராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
தற்போது சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நாட்டின் பழமையான அரசியல் கட்சியான “காங்கிரஸ்” கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரஷாந்த் கிஷோர் 2014 ஆம் ஆண்டில், நரேந்திர மோடி முதல்முறையாக பிரதமர் நாற்காலியில் ஏறுவதில் முக்கியப் பங்காற்றினார் என்பதும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSCRP), திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் திமுக போன்ற பிராந்தியக் கட்சிகளுடன் கைகோர்த்து வெற்றியைக் கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.