நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுதாக்கல் செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீமன்றத்தையும் தலைமை நீதிபதிகளையும் விமர்சித்திருந்தார். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பூஷணை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், மன்னிப்புக் கேட்டால் அவரை விடுவிப்பதாக அறிவித்தது. ஆனால் பூஷண் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற பதிவாளரிடம் அபராத தொகையான ஒரு ரூபாயை பூஷண் செலுத்தினார்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்ப்பு குரல்களை மவுனமாக்க, அரசு அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாகவும் பிரசாந்த் பூஷண் குற்றஞ்சாட்டியுள்ளார்.