கேரள முதல்வரை மாற்றுத்திறனாளி ஒருவர் சந்தித்து நிவாரண நிதி அளித்த புகைப்படம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் இருப்பவர் மாற்றுத்திறனாளி பிரணவ். இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. ஆனால் தனது கால்களை கைகளைப் போல பயன்படுத்தும் பிரணவ், பல சாதனைகளை புரிந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட வாக்கு இயந்திரத்தில் தனது கால்களை பயன்படுத்தி அவர் வாக்களித்தார்.
இந்நிலையில், கேரள மாநில முதல்வரான பினராயி விஜயனை சந்தித்தார் பிரணவ். இதில் பிரணவ் கால்களை தன்னுடைய விரல்களால் பிடித்து குலுக்கி வரவேற்றார் பினராயி விஜயன். கேரள மாநில நிவாரணத்துக்கு நிதியளித்த பிரணவ், தனது கால்களை கொண்டு செல்போனை பிடித்து முதல்வருடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.