நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமலாகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதன்படி ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் கல்வியாண்டு முதல் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படவுள்ளது.