பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக, கர்நாடகா மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணாவை அவரது தாத்தாவும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா மற்றும் பாஜக பாதுகாப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து முதல்முறையாக பிரஜ்வல் ரேவண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், பொய்யான குற்றச்சாட்டுகளால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், முன்விரோதம் காரணமாக தன் மீது திட்டமிட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறியிருக்கும் பிரஜ்வல், மன உளைச்சல் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், சிறப்பு புலனாய்வுக் குழு முன் வரும் 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.