கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீது, பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே அவர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில், ’விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் 2 முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரஜவலுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமருக்கு 2 முறை கடிதம் எழுதியிருந்தார். அதேநேரத்தில், ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து தலைமறைவாகவே இருப்பது முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, "பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்ப வேண்டும்; இல்லையென்றால் எனது கோபத்திற்கு ஆளாக நேரிடும்" என தேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, ”மே 31ஆம் தேதி, சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகுவேன்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இது எதிர்க்கட்சிகளின் அரசியல் நாடகம். இது, என்னை மனச்சோர்வுக்கு தள்ளியது. இதனாலேயே நான் தனிமைப்படுத்தப்பட்டேன். இதற்காக, நான் என் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் மன அழுத்தத்தில் இருந்தேன். நான் மே 31ஆம் தேதி இந்தியாவுக்கு வரும்போது, எஸ்ஐடி (மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு) முன் ஆஜராகுவேன். அவர்களுடைய விசாரணைக்கு ஒத்துழைப்பேன். அனைத்து பதில்களையும் வழங்குவேன். சட்ட அமைப்பின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது (மற்றும்) என் மீதான இந்த பொய் வழக்குகளில் இருந்து நான் வெளியே வருவேன். கடவுள் மற்றும் எனது குடும்பத்தினரின் ஆசீர்வாதம் எனக்கு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.