பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்த இறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மந்திரவாதம் மூலம் தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என அக்கட்சியின் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்களை கடந்த ஓராண்டில் பாஜக இழந்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சி தலைவர்களின் அடுத்தடுத்த மரணத்துக்கு போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் புதிய காரணத்தை கூறியுள்ளார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விடுவதாக சாது ஒருவர் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் அது தற்போது உண்மையாகி வருவதாகவும் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். இவரது இந்தக் கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது போபால் தொகுதியில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்கூர், அவரை எதிர்த்து களம் கண்ட திக்விஜய் சிங்கை தோற்கடித்தார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவிக்கும் தாக்கூர், அதில் சிலவற்றிற்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்தார் பிரக்யா. இதற்குப் பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. தாகூரின் இந்த கருத்துக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், அந்தக் கருத்தால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.