அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான மற்றும் மோசமான கருத்துகளை வெளியிடுபவர்களை சிறையில் அடைக்க பீகார் மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று சமூக ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துகளை சைபர் கிரைம் பிரிவின் கீழ் கொண்டுவர மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பீகார் மாநில அரசின் அனைத்து செயலாளர்களுக்கும், அம்மாநில பொருளாதார குற்றப்பிரிவின் தலைவர் ஐ.ஜி.நயார் ஹஸ்னைன் கான் எழுதிய கடிதத்தில், "சில நபர்களும் அமைப்புகளும் சமூக ஊடகங்களில் அவதூறான மற்றும் மோசமான கருத்துகளை அரசாங்கத்திற்கு எதிராக, மரியாதைக்குரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக வெளியிட்டு வருகின்றன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட சட்டத்திற்கு எதிரானது மற்றும் சைபர் கிரைம் என்ற பிரிவின் கீழ் வருகிறது.
இதுபோன்ற செயல்களைப் பற்றி பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். இதனால் குற்றவாளிகளை நீதிக்கு கொண்டு வர முடியும்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஜி. கான் எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
``சில இடங்களில் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. எதிர்த்து எழுதினால் சிறை என ஹிட்லரின் பாதையை முதல்வர் நிதீஷ் பின்பற்றுகிறார்" என்றதுடன், ``நிதீஷ் ஜி... நீங்கள் சோர்வாக இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கொஞ்சம் வெட்கப்படுங்கள்" என்றும், இந்த போஸ்ட்டுக்காக முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்" என சவால் விட்டுள்ளார்.