காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டதாகவும், அது அரசுக்குத் தெரியாமல் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஆனந்தகுமார் என்பவர் தலைவராக இருக்கும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், “மத்திய அரசு கடைபிடிக்கும் போதைப் பொருள் தீவிரவாத கொள்கையை மதித்து இரும்புக் கரம் கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் அவரது கூட்டாளியான பேராசிரியர் சங்கர் ஆகியோர் கூட்டு சதி செய்துள்ளனர். கல்லூரியிலிருந்த கஞ்சா செடிகள் பற்றிய உண்மையை அரசுக்கு தெரிவிக்காமல் அவற்றை ரகசியமாக அழித்து, மோசடிக் காரணம் கூறுகின்றனர்.
மேலும் கண் துடைப்பு நாடகமாடி அரசை ஏமாற்றினர். அவர்களை அரசு உடனே கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரை பெற்றுக்கொண்டு போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றி வரும் உயர் அதிகாரிகள் மீதும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரி பேராசிரியர் ஆனந்த குமாரின் இந்த போஸ்டர், புதுச்சேரி முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேளாண் கல்லூரி அதிகாரிகளை நாம் தொடர்புகொள்ள முயற்சித்த போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.