"5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து 26ஆம் தேதி முடிவு"- சன்னி வக்ஃபு வாரியம்
அயோத்தி வழக்கு தீர்ப்பின்படி ஒதுக்கப்படும் ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து தங்களது முடிவை வரும் 26ஆம் தேதி தெரிவிப்பதாக சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் வரும் 26ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் சுஃபர் ஃபரூக்கி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிலத்தை ஏற்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன் தீர்ப்பிற்கு அவர்களுடைய நடவடிக்கைகள் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும் மேல்முறையீடு செய்யும் திட்டம் இல்லை என சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.