அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார் ரியான்னா. அது உலகளவில் கவனத்தை ஈர்த்தது. அந்த ஒரு ட்வீட்டால் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த சூழலில் தான் மேலாடையின்றி விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.
“ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் Popcaan கேட்டுக்கொண்டதற்காக இன்றிரவு மேலாடை இன்றி” என அந்த ட்வீட்டுக்கு கேப்ஷன் போட்டுள்ளார் ரியான்னா.
இது இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. “இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்” என சொல்லி டெல்லி மற்றும் மும்பை போலீசாரிடம் அந்த இரண்டு சமூக வலைத்தள கணக்குகள் மீதும் புகார் கொடுத்துள்ளனர்.