கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி விழாவிற்காக சாமி சிலைகள் செல்லும் நிகழ்ச்சியை கேரள அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மன்னராட்சி காலம் முதல் பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பூஜைக்கு சரஸ்வதி அம்மன் உட்பட 3 சாமி சிலைகள் மற்றும் பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் பாதயாத்திரையாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் காரணமாக வாகனங்களில் சாமி சிலைகளைக் கொண்டு செல்ல கேரள அரசு திட்டமிட்டது.
ஆனால் பாரம்பரிய முறைகளை மீற வேண்டாம் எனவும் பாதயாத்திரையாக கொண்டு செல்ல வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதையொட்டி, பாரம்பரிய நிகழ்ச்சியைபோல என்றும் பாதயாத்திரையாக சாமி சிலைகள் பத்மநாபபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டன. நிகழ்ச்சி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களின் கோரிக்கையை ஏற்று பாரம்பரிய முறையிலேயே கேரள அரசு ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சியை தருவதாக கூறியதோடு கேரள அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் காரணமாக கேரள போலீசாரின் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி போன்ற சில நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டாலும் ஏனைய ஏற்பாடுகளை கேரள அரசு சிறப்பாக செய்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டார்.