வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களை தங்களுக்கு ஓட்டுப்போட நிர்பந்தித்த புகாரில் பூத் ஏஜெண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நேற்று 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ஹரியான மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பூத் ஏஜெண்ட் ஒருவர் அத்துமீறி நடந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான பொத்தானை அழுத்த வரும்நேரத்தில், ‘இந்த பொத்தானை அழுத்துங்கள்’ என அந்த ஏஜெண்ட் வாக்காளர்களிடம் கூறுவதுபோல் உள்ளது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அந்த நபரே பொத்தானை அழுத்துவது போன்றும் அந்த வீடியோ காட்சிகள் உள்ளன.
பூத் ஏஜெண்ட் அத்துமீறி நடந்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதனையடுத்து தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட பூத் ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்குப்பதிவு பிரச்னை இல்லாமல் நடக்கிறதா என்பதை கவனிக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் ஏஜெண்ட்டை நிறுத்தும். அப்படி நிறுத்தப்பட்ட பூத் ஏஜெண்ட், குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வாக்காளர்களை நிர்பந்தித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.