"கௌதம் கம்பீரிடம் இவ்வளவு கொரோனா மருந்துகள் எங்கிருந்து வந்தன?" - டெல்லி உயர் நீதிமன்றம்
கொரோனா தொடர்பான மருந்துகளை அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதுக்கி வைக்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா அத்தியாவசிய மருந்து பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 'பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மருந்து பொருட்களை பதுக்கி வைப்பதாக புகார் எழுந்து இருக்கிறது. எனவே, டெல்லி காவல்துறை இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்' என கூறியிருந்தது.
இதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் ஸ்ரீநிவாஸ், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரிடமும் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தியது.
இதன்முடிவில் 'சீனிவாஸ், கௌதம் கம்பீர் ஆகியோர் உள்நோக்கத்துடன் மருந்து பொருட்களை பயன்படுத்தவில்லை; அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை' என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "மருந்து பொருட்களை இத்தகைய கடினமான தருணங்களில் அரசியல் கட்சியினர் பதுக்கிவைக்க வேண்டிய அவசியம் இல்லை" என நீதிபதிகள் கூறினர். குறிப்பாக கௌதம் கம்பீர் ஏராளமான மருந்து பொருட்களை வைத்திருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "இவருக்கு இந்த மருந்துகள் எங்கிருந்து வந்தது?" என கேள்வி எழுப்பினர்.
"உண்மையில் அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால், தங்களிடம் உள்ள மருந்துகளை உடனடியாக அரசின் பொது மருத்துவ சேவைக்கு உடனடியாக வழங்கி, அரசு மருத்துவமனைகள் மூலமாக பொது மக்களிடம் சென்று சேர்வதை அவர்கள் செய்திருக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறினர்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தீபக் சிங், அரசியல் கட்சியினர் நோக்கங்களுடன் மருந்து பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், இது மிகப்பெரிய மருந்து மாபியாவாக மாறி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த டெல்லி காவல் துறையினர், 'அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் மருந்து பொருட்கள் உடனடியாக விடுவிக்கப்படும்' என உறுதி அளித்துள்ளர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'அரசியல்வாதிகளிடம் இருக்கக்கூடிய மருந்து பொருட்களை கைப்பற்ற, நாங்கள் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை' என்றும், அரசியல்வாதிகள் தாங்களே பார்த்து தங்களது தவறை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.
- நிரஞ்சன் குமார்