டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக ஒன்பதாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுப்புத் தெரிவித்தார்.
இருப்பினும் அமலாக்கத்துறையினர் சம்மனை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்ததால், தான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கைது நடவடிக்கையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பாதுகாப்பை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையை தொடர்ந்து நேற்று இரவு அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைது நவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இரவோடு இரவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைத்த போதும், காலை 10.30 மணிக்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்...
பாஜகவுக்கு "இந்தியா" தக்க பதிலடி கொடுக்கும் என எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில், “பயத்தின் பிடியிலுள்ள அந்த சர்வாதிகாரி, உயிரற்ற ஓர் ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். அதற்காக கட்சிகளை உடைத்ததும், நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்ததும், பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியும் செயல்படுகின்றனர்.
அந்த அசாதாரண சக்தி தற்போது முதலமைச்சர்களை கைது செய்வதும் சகஜமாகிவிட்டது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடம் இருந்து அகற்ற பாஜக எண்ணுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தோல்வி பயத்தில் சிறைப்பட்டவர்கள், வேறு ஒருவரை சிறையில் அடைத்து என்ன செய்யப் போகிறார்கள்? மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்த பிறகு, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடடிவக்கை எடுக்கிறது பாஜக. உண்மையில் இது ஒரு புதிய மக்கள் புரட்சியை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகியுள்ளதால், கைது நடவடிக்கையை மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், “2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது 10 ஆண்டுகள் அவல ஆட்சி மற்றும் தோல்வி உறுதியாகியுள்ளதை நினைத்து பாஜக அஞ்சுகிறது. ஹேமந்த் சோரனை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து அருவருக்கத்தக்க நிலைக்கு தரந்தாழ்ந்துள்ளது பாஜக. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான இத்தகைய தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகள் மீது பாஜக நடத்தும் வேட்டையாடல்.
ஒரே ஒரு பாஜக தலைவர் மீது கூட விசாரணையோ, கைது நடவடிக்கையோ இல்லை என்பதிலிருந்தே பாஜகவின் அதிகார அத்துமீறலும், ஜனநாயகச் சிதைப்பும் அப்பட்டமாகிறது. இந்த கைது நடவடிக்கைகள் பாஜகவுக்கு எந்த பலனையும் தராது, மாறாக இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிறது. பாஜகவின் முகத்திரை கிழிந்துள்ளது. மக்களின் சினத்தை எதிர்கொள்ள தயாராக இரு பாஜகவே!” என எச்சரித்துள்ளார்.
“டெல்லி முதல்வர் அரவிந்த கெஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பொதுத் தேர்தலுக்கு சற்று முன்னதாக இவர்களை (பாஜக-வை) எதிர்க்கும் அனைத்து குரல்களையும் மௌனமாக்குவதற்கான சதி இது. ஜனநாயக செயல்முறைக்கு அஞ்சுபவர்களின் கோழைத்தனத்தை இந்த நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது” என்றுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
“அரவிந்த் கெரஜிவால் கைது செய்யப்பட்டுள்ளார்...
ஜனநாயகத்தின் தாய்.. அமலாக்கத்துறை தனது கீழ்ப்படிதலுள்ள மகன் என்பதை இதன் மூலம் நிரூபித்து காட்டியுள்ளது” என்றுள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்.
”ED யால் மற்றொரு முதல்வர் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் மற்றும் வளர்ந்து வரும் எதேச்சாதிகாரத்தை தூண்டும் நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக ஆளும் கட்சியின் செய்யும் இந்த கோழைத்தனமான செயல் மற்றும் அவநம்பிக்கையான நடவடிக்கைகளை எல்லாம், அவர்களின் அச்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம்” என்றுள்ளார் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி.