வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்

வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்
வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்
Published on

"நாட்டில் வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை" என்று சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில், பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் கூறினார்.

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியது:

"காலம் கடந்தாலும் கூட சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே மாறாமல் உள்ளன. தேசிய வாதம் மற்றும் நாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது கருத்துகள், மக்களுக்கும், உலகத்துக்கும் சேவை செய்வதில் அவர் ஆற்றிய போதனைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

அண்மையில் புதிய கல்வி கொள்கை வழங்கிய வசதி மற்றும் புத்தாக்க கற்றல் முறைகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் நல்ல சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம். இது இல்லாததால்தான், இளைஞர்கள் வெளிநாடு செல்ல நேரிடுகிறது.

நம்பிக்கையான, தெளிவான, அச்சமற்ற, தைரியமான இளைஞர்களை நாட்டின் அடித்தளமாக சுவாமி விவேகானந்தர்தான் அங்கீகரித்தார். உடல் தகுதிக்கு, இரும்பு தசைகளும், எஃகு நரம்புகளும் தேவை; ஆளுமை வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை தேவை; தலைமைப் பண்புக்கும், குழுப் பணிக்கும் அனைவரையும் நம்ப வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறினார்.

அரசியலில் இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க வேண்டும். நேர்மையற்ற செயல்பாடுகளின் தளம்தான் அரசியல் என்ற பழைய கருத்து மாறி, இன்று நேர்மையானவர்களுக்கும் பொது சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. நேர்மையும், செயல்பாடும்தான் இன்றைய தேவை.

மக்களுக்கு ஊழல் சுமையாக மாறிவிட்டது. வாரிசு அரசியல் முறையை ஒழிக்க வேண்டும். ஜனநாயக அமைப்பில் வாரிசு அரசியல், திறமையின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கிறது. இதுபோன்ற நபர்கள், குடும்ப அரசியல், அரசியலில் குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். வம்சாவளி பெயர் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் காலம் எல்லாம் தற்போது முடிந்து விட்டது. வாரிசு அரசியல் நோய் இன்னும் ஒழியவில்லை. வாரிசு அரசியல், நாட்டை முன்னேற்றாமல், தன்னையும் குடும்பத்தையும்தான் வளர்க்கிறது. இந்தியாவில் சமூக ஊழலுக்கு இதுதான் முக்கிய காரணம்.

பேரழிவில் தங்கள் சொந்த பாதையை உருவாக்க கற்றுக்கொள்ளும் சமூகம், தங்கள் விதியை எழுதுகிறது. அதனால்தான், 130 கோடி இந்தியர்களும் தங்கள் சொந்த விதியை இன்று எழுதுகின்றனர். இன்றைய இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும், புத்தாக்கமும், நேர்மையும் நமது நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com