காவல் அதிகாரி தன்னை துன்புறுத்தியதாக துணை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் ஹோஷியார்பூரில் உள்ள தாண்டா காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 52 வயதான துணை உதவி ஆய்வாளர் சதீஷ் குமார், தாண்டா காவல் நிலையத்திற்கு பணிக்காக சென்றுள்ளார். அங்கு விசாரணை அறைக்குச் சென்ற அவர், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, வீடியோ பதிவு மற்றும் தற்கொலை குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில், தாண்டா காவல் நிலைய அதிகாரி தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அதுவே தனது தற்கொலைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரிந்தர் பால் கூறுகையில், குமார் தனது பணிக்காக ஹரியானா காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை வந்துள்ளார். பின்னர் விசாரணை அறைக்குச் சென்ற அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் தற்போது குமாரின் உடல் உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.