போலீசார் தாக்கியதில் வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் விசாரணை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி போலீசார் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தின் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை கடந்த 8ம் தேதி கடத்தல் வழக்கு ஒன்றில் அம்மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து மூன்று பேரையும் போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும், அதில் கர்ப்பிணியான ஒரு பெண்ணின் குழந்தை கலைந்துவிட்டதாகவும் அப்பெண்களில் ஒருவர் தற்போது புகார் அளித்துள்ளார். அப்பெண்ணின் புகாருக்கு பின்னரே இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது.
இது குறித்து புகார் அளித்துள்ள அப்பெண், ''வீட்டிலிருந்த என்னையும், என் சகோதரிகள் இரண்டு பேரையும் காவலர்கள் புஹ்ரா புறநகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு எங்களை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கினர். அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டால் கொன்றுவிடுவேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அப்போது போலீசார் தாக்கியதில் கர்ப்பிணி சகோதரி ஒருவரின் கரு கலைந்துவிட்டது.
அதன்பின்னர் எங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வெற்றுக்காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். எங்கள் மூத்த சகோதரன் இருக்கும் இடத்தைக் கேட்டு பூட்ஸ் காலாலும் லத்தி மூலமும் எங்களை தொடர்ந்து தாக்கினர். ஆனால் அவர் இருக்கும் இடத்தை நாங்கள் சொல்லவில்லை. பின்னர் கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் விடுவிக்கப்பட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியே தெரியவந்த பிறகு பெண்களின் குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவேண்டுமென அசாம் மாநில முதலமைச்சர், தர்ராங் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள தர்ராங் மாவட்ட எஸ்பி, ''புகார் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புகாரில் தொடர்புடைய பெண்களின் மருத்துவ அறிக்கையை கேட்டுள்ளோம். அதன் முடிவுக்கு ஏற்ப விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.