மத்திய பிரதேச காவலர் ஒருவர் மனைவி மிரட்டுவதாகக் கூறி எழுதிய விடுமுறை கடிதம் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பள்ளி பருவத்திலிருந்தே விடுமுறை எடுத்தால் விடுப்பு கடிதம் எழுதுவது வழக்கம். அதிலும், அரசு தனியார் என எல்லாத் துறைகளிலும் விடுமுறை எடுத்தால் கடிதம் கொடுப்பது முறையாகிவிட்டது. சில நேரங்களில் வித்தியாசமான காரணங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதுவதுண்டு. ஆனால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு காவலர் விடுமுறை எடுக்கக்கூறிய காரணத்தை, ’’காவலருக்கே இந்த நிலைமையா?’’ என்று நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்தவர் கான்ஸ்டபிள் திலிப் குமார் அஹிர்வார். இவர் தனது மனைவியின் சகோதரர் திருமணத்திற்கு செல்ல விடுப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்தியில் எழுதியுள்ள அந்த கடிதத்தில், திருமணத்திற்கு வராவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனைவி தன்னை மிரட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே வருகிற டிசம்பர் 11ஆம் தேதி தனக்கு விடுப்பு அளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விடுப்பு கடிதத்தில் பின்குறிப்பு கொடுப்பது தவறான செயல் என்றாலும், தனிப்பட்ட முறையில் மனைவி தன்னை மிரட்டுவதாகக் கூறி காவலர் குறிப்பிட்டது குறித்து டி.ஐ.ஜி, ’’காவல்துறையில் விடுமுறை எடுக்க கீழ்நிலையில் உள்ள பணியாளர்கள் பொதுவாக பல்வேறு காரணங்களைக் கூறுவதுண்டு. ஆனால், இந்த கான்ஸ்டபிள் கூறிய காரணம் வித்தியாசமாக உள்ளது’’ என்றார்.