திருப்பதியில் 5 வயது சிறுவனை கடத்திய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பதி திருமலையில் 5 வயது குழந்தை கடத்தப்பட்டதுள்ளது. தேவஸ்தான கண்காணிப்பு கேமெராவில் பதிவான வீடியோ காட்சிகளை வெளியிட்ட காவல் துறையினர், அதுகுறித்த தகவல் அளிக்க பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் வெங்கட்ரமணா என்பவர் பக்தர்களுக்கு நாமம் இடும் பணி செய்து வருகிறார். இவர் தனது 5 வயது மகனான கோவர்த்தனை தேவஸ்தானத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு மகனை தனக்கு அருகில் அமரவைத்து, பணி செய்து கொண்டிருந்திருக்கிறார் கோவர்த்தனன். அப்போது திடீரென கோவர்த்தன் காணாமல் போயிருக்கிறார். இதைத்தொடர்ந்து திருமலையின் பல்வேறு பகுதிகளில் தேடியபோதும் அவர் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால், திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து விசாரணை செய்து வரும் காவல் துறையினர், தேவஸ்தான கண்காணிப்பு கேமெராக்களை ஆய்வு செய்த போது, மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் உள்ள பெண் ஒருவர், 5 வயது சிறுவனை அழைத்து செல்வது தெரியவந்துள்ளது. திருமலையில் உள்ள பாலாஜி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி பேருந்தில் ஏறுவதும் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு பின் குழந்தை என்ன ஆனது என தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அது குறித்த காட்சிகளை காவல் துறை வெளியிட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.