என்.டி.திவாரி மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மனைவி மீது போலீசாரின் சந்தேகம் வலுத்துள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக இருந்தவர் என்.டி.திவாரி. இவர் மகன் ரோகித் சேகர் திவாரி (40) டெல்லியில் வசித்து வந்தார். இவர், கடந்த 12 ஆம் தேதி உத்தரகாண்டுக்கு சென்றுவிட்டு 15 ஆம் தேதி வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் ரோகித்தின் அம்மா உஜ்வாலா திவாரிக்கு கடந்த 16 ஆம் தேதி, போன் அழைப்பு வந்தது. அதில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ரோகித் மயங்கி கிடக்கிறார் என்று கூறப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் ரோகித்தை சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், ரோகித் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. அவர் மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளதால் இதை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். உஜ்வாலாவுக்கு போன் வந்த போது, ரோகித் மனைவி அபூர்வா, உறவினர் சித்தார்த் மற்றும் வேலைக்காரப் பெண் வீட்டில் இருந்துள்ளனர்.
இதையடுத்து ரோகித் சேகர் திவாரியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அங்கு ஏழு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு வேலை செய்யவில்லை. ரோகித் திவாரியின் மனைவி, உறவினர் மற்றும் வேலைக்காரப் பெண்ணிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
ரோகித்தும் அவர் மனைவி அபூர்வாவும் பிரச்னை காரணமாக, ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று, ரோகித்துக்கு அபூர்வாவிடம் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. வேலைக்காரப் பெண், அந்த வீடியோ அழைப்பை ரோகித்திடம் கொடுத்துள்ளார். அப்போது இருவரும் சண்டையிட்டதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரோகித் மனைவி அபூர்வாவிடம், போலீசார் நேற்று 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாகவும் தேவைப்பட்டால் உண்மை அறியும் சோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ரோகித் திவாரியின் அம்மா கூறும்போது, “ரோகித், அதிகாரி ஒருவருடனும் அவர் மனைவியுடனும் பழகி வந்தது அபூர்வாவுக் குப் பிடிக்கவில்லை. ரோகித்தை திருமணம் செய்து கொள்ளும் முன் அபூர்வா, வேறொருவருடன் பழகிவந்தார். எங்கள் சொத் து மீது அபூர்வா குடும்பத்துக்கு ஆசை இருந்தது. அதை பற்றி திட்டமிட்டனர். இதுபற்றிய விவரங்களை பின்னர் வெளியிடு வேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.