ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் சூரியகாந்தி மலர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதனிடையே சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஹரியானா மாநில விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒரு குவிண்டால் விதைகளை அரசு 6,400 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், விவசாயிகளின் கோரிக்கை அரசால் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி தனியார் விற்பனை நிறுவனங்களை அணுகுகின்றனர் விவசாயிகள். அங்கு குவிண்டால் ஒன்றுக்கு வெறும் 4,000 ரூபாய்க்குத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசின் போக்கைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று, ஹரியானாவையும் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரையும் இணைக்கும் குருக்ஷேத்திரா தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மட்டுமின்றி அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை காவல்துறை கலைத்தது. விவசாயிகளை போலீசார் விரட்டிவிரட்டி தடியடி நடத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பதிவில், "மனோகர் லால் கட்டார் தலைமையிலான மாநில அரசு, தடியடி அரசாக மாறியிருக்கிறது. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் தாக்கப்படுகிறார்கள்.
இந்த ஆட்சியில் நியாயம் கேட்டால் தடியடி கிடைக்கும். இந்த அடக்குமுறையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. விவசாயிகள் மீது இந்த அரசுக்கு இருக்கும் வெறுப்புணர்வு அமல்பலமாகியுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.