“போலீசார் என் மகனை சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர்”- பரிதவிக்கும் தாய்..!

“போலீசார் என் மகனை சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர்”- பரிதவிக்கும் தாய்..!
“போலீசார் என் மகனை சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர்”- பரிதவிக்கும் தாய்..!
Published on

போலீசார் தனது ஒரேயொரு மகனை கொன்றுவிட்டதாக தாய் ஒருவர் கண்ணீர் வடிக்க புகார் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஹேம்நாத் குமார் என்ற ராஜூ குப்தா. இவரை நகை திருட்டு புகாரில் கடந்த புதன்கிழமை போலீசார் அழைத்துச் சென்றனர். இதனிடையே காவல்நிலையத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தன் ஒரேயொரு மகனை காவலர்கள் சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டதாக ராஜூவின் அம்மாவான ரீனு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது கணவர் ஓம்பிரகாஷ் குப்தா கடந்த 2001-ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். எனது இரண்டு மகள்களும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். நானும், எனது மகனும் இங்கே வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது மகன் மனதளவில் பலவீனமானவன். பக்கத்து வீட்டுக்காரரான அன்சுல் என்பவரின் கெமிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தான். கடந்த புதன்கிழமை என் மகன் சுமார் 7 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி விட்டதாக அன்சுல் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து என்னையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது என் மகனை அவர்கள் சித்ரவதை செய்வதை என்னால் காண முடிந்தது. அத்துடன் என் மகனை சித்ரவதை செய்வதை என்னையும் பார்க்க வைத்து துன்புறுத்தினர். பின்னர் இரவு 6 மணியளவில் என்னை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டனர். ஆனால் 9 மணி வரை என் மகன் திரும்ப வரவேயில்லை. பிறகு என் மகன் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். என் மகனை போலீசாரே சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர்” என 55 வயதான ரீனு கண்ணீருடன் கூறுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜூவின் உடல் வீடியோ ஆதாரங்களுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் ராஜூ மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ராஜூவின் தோள், கால், கைகளில் லேசான காயம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இதுகுறித்து மூத்த எஸ்பி அமித் கூறும்போது, “ ராஜூ மரணம் தொடர்பாக சிகந்த்ரா காவல்நிலையம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராஜூ பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Courtesy: The Times of India

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com