கொடைக்கானலில் போதை காளானை தேடி வனப்பகுதிக்குள் சென்று வழி தெரியாமல் இரண்டு நாட்கள் உணவின்றி காட்டுக்குள் திரிந்த கேரளா வாலிபர்களை போலீசார் பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 5 பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானல் மேல்மலை பூண்டி அருகே தனியார் தோட்டத்தில் வாடகைக்கு தங்கியுள்ளனர். அன்றிரவு அனைவரும் போதை காளான் சாப்பிட்டுள்ளார். போதை அதிகரிக்கவே மீண்டும் போதை காளனைத் தேடி இரவு காட்டுக்குள் அல்தாஃப் மற்றும் அஷ்ரஃப் இருவரும் சென்றுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவர்கள் திரும்ப வழி தெரியாமல் இரண்டு நாட்கள் வனப்பகுதியில் இருந்துள்ளனர்.
உடன் வந்த மற்றவர்கள் கேரளாவில் உள்ள அல்தாஃப் மற்றும் அஷ்ரஃப் வீட்டிற்க்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெற்றோர்கள் கேரளா காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து கேரளா போலீசார் கொடைக்கானல் போலீசாருடன் சேர்ந்து காட்டுக்குள் சென்று தேடியதில் அங்கு மரம் வெட்டும் தொழில் செய்து வருபர்கள் அல்தாஃப் மற்றும் அஷ்ரஃபை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.