கேரள மாநிலம் ஆலப்புழை - கண்ணூர் விரைவு ரயில் நேற்றிரவு கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலில் வந்த மர்ம நபர் ஒருவர், தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த எரிபொருளை பயணிகள் மீது தூக்கி வீசிய பிறகு தீ வைத்துள்ளார். இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடியதுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரயிலின் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள், இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த போலீசார், தீ விபத்தில் காயமடைந்த 9 பயணிகளை மீட்டு கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து, ரயிலில் வந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், ரயில் நின்ற ஏலத்தூர் ஆற்றுப் பாலத்தின் முன்பு இரண்டு வயது குழந்தை இந்த குழந்தையின் உறவினர் ரகுமத் மற்றும் நவுஷ்ஷாத் ஆகிய மூன்று பேர் ரயில் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறும்போது.. தீ பற்றி எரிந்தபோது இந்த மூன்று பேரும் ரயிலில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தண்டவாளத்தில் இருந்து ஒரு பேக் கிடைத்துள்ளது. அதில், எரிபொருள் நிரப்பிய பாட்டில், 2 மொபைல் போன், இந்தியில் எழுதிய ஒரு புத்தகம் உட்பட பல பொருட்கள் கிடைத்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள ரயிலில் தீ வைத்தவருடையது என சந்தேகிக்கப்படும் பையில் உள்ள டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைரியில் கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த டைரியில் ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் கிடைத்துள்ளன. இதனை வைத்து தீ வைப்பு சம்பவம் மாவோயிஸ்டுகளின் செயலா? அல்லது பயங்கரவாதிகளின் சதியா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்த குற்றவாளி எந்த பகுதியைச் சேர்ந்தவர்? அவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தீ வைத்த குற்றவாளியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டு கேரள காவல்துறை தேடுதல் வேட்டையை முடுக்கியுள்ளது.