கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்துள்ளார். இளைஞர் தொடர்ச்சியாக சாலை விதிகளை மீறியது செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் பதிவாகியுள்ளது. மேலும் இதற்கான அபராத தொகையை செலுத்துமாறு கடிதம் அனுப்பியும், அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் இளைஞர் அதனை செலுத்தாமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் அதனை அந்த இளைஞர் செலுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் சமீபத்தில் அவர் செல்கையில் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளார். அப்போது இளைஞருக்கு கண்ணூர் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அந்த நேரத்தில்தான், இளைஞரின் பெயரில் ஏற்கெனவே 155 சாலை விதிகள் மீறப்பட்டதற்கான அபராதத் தொகை நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இளைஞருக்கு 86 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், இளைஞரின் ஓட்டுநர் உரிமைத்தை ஓராண்டு தடைசெய்து கண்ணூர் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இளைஞர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.