கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என மீரட்டில் ஒரு நபர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகந்தா சீனிவாச மூர்த்தியின் மருமகன் நவீன் என்பவர் இஸ்லாம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஒரு கும்பல், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டையும் காவல் நிலையத்தையும் தாக்கினர். இதனால், கிழக்கு பெங்களூர்வில் ஏற்பட்ட வன்முறையில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, எம்.எல்.ஏ.வின் உறவினர் உட்பட 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என மீரட்டில் ஒரு நபர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இந்த நபர் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள ஃபலாவாடா நகரில் வசிக்கும் ஷாஜெப் ரிஸ்வி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பேசிய வீடியோவை கைப்பற்றியுள்ளோம். அவர் மீது ஐபிசி 153ஏ, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். இன்னும் கைது செய்யப்படவில்லை. விரைவில் அவரை கைது செய்வோம்” எனத் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் சமாஜ்வாடி கட்சியில் மாநிலச்செயலாளராக இருந்தவர் எனக்கூறப்படுகிறது.