முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரியும், இதற்காக டெல்லியில் போராடிய மருத்துவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும் நாளை முதல் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
முதுநிலை நீட் கலந்தாய்வை விரைவில் நடத்த வலியுறுத்தி மருத்துவர்கள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இருந்து உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காவல்துறையினர் அடக்குமுறையுடன் நடந்துகொண்டதில் மருத்துவர்கள் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினரின் அடக்குமுறையை கண்டித்தும், முதுநிலை நீட் கலந்தாய்வை உடனடியாக நடத்தக் கோரியும் நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.