தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலமாக பணம் பறிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு கடந்த வாரம் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்தது. மேலும் இத்தொகையின் அளவு 200 கோடி
ரூபாயாகவும் பின்னர் 400 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு மின்னஞ்சல் வந்தது.
இது போன்று மொத்தம் 5 மின்னஞ்சல்கள் ஒரே முகவரியில் இருந்து வந்தன. ’எவ்வளவு முயற்சித்தாலும் என்னை பிடிக்க முடியாது. உங்களை கொல்ல ஒரே ஒரு துப்பாக்கி குண்டு போதும்’ என மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்ததால் பதற்றம் அதிகரித்தது. இது தவிர வேறு ஒரு முகவரியிலிருந்தும் ஒரு மின்னஞ்சல் வந்தது.
அதில் 500 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மும்பை காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானாவின் வாரங்கல்லைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வன்பர்த் என்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்தான் 500 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் என காவல்துறை கூறியுள்ளது.
மேலும் ராஜ்வீர் ஜகத்சிங் காந்த் என்ற 20 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் காந்தி நகரை சேர்ந்த இவர் 400 கோடி ரூபாய் கேட்டு 5 மின்னஞ்சல்களை அனுப்பியவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.