இந்தியாவுக்கு திரும்பி வந்தால் தான் பலரால் அடித்துக் கொல்லப்படுவேன் என நீதிமன்றத்தில் நிரவ் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
நிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை மாற்றி வருகிறார்.
இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நிரவ் மோடிக்கும் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த கடிதத்தில், சம்பளம் தரப்படாத தனது முன்னாள் ஊழியர்கள், வாடகை தரப்படாத பில்டிங் உரிமையாளர்கள், சிபிஐ பறிமுதல் செய்த நகைகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் மற்ற ஏஜென்சிகளும் நபர்களுடம் தனக்கு மிரட்டல் விடுப்பதாக நிரவ் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னுடைய 50 அடி உயர உருவபொம்பையை எரித்துள்ளார்கள். என் மீது கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்வதற்கு வாய்ப்புள்ளது. என்னை ராவணனுடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மேலும், என்னை ஒரு அரக்கனை போல் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கி மோசடியின் அடையாளமாக என்னை ஆக்கிவிட்டார்கள். அதனால், என்னால் இந்தியாவுக்கு வர முடியாது” என்று நிரவ் மோடி கூறியுள்ளார்.
பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். அஸ்மியிடம் அந்த கடிதம் குறித்து விளக்கி நிரவ் மோடி வழக்கறிஞர் வாதாடினார்.