டெல்லியில் 31 ஆவது நாளாக போராடிவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியணா விவாசாயிகள் 31 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.மத்திய அரசுடன் நடத்தப்பட்ட ஐந்த சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 6 ஆம் சுற்று பேச்சு வார்த்தை ரத்துசெய்யப்பட்டது.
முன்னதாக, பி.எம் கிசான் திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டுக்கான 3 ஆவது கட்டத் தவணை தொகை 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்த மோடி விவசாயிகள் போராட்டம் குறித்து கூறும் போது, “ வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை மேற்கொள்கின்றனர். மத்திய அரசு விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. விவசாயிகள் சில கோரிக்கைகளுடன் போராட வந்தனர். ஆனால் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை திசை திருப்புகின்றனர்.” என்றார்.
இதுகுறித்து பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும் போது, “விவசாயிகளை தவறாக வழிநடத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் திசை திருப்ப பார்ப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா பதிலளித்தார். இது குறித்து அவர் கூறும் போது, “ கடுங்குளிரில் ஒரு மாதமாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு விரும்பவில்லை.குளிரால் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கவில்லை. விவசாயிகளை பணிய வைக்க மட்டுமே மத்திய அரசு விரும்புகிறது. பிரச்னையை தீர்க்க அரசுக்கு எண்ணமே இல்லை” என்றார்
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் போது, “ அந்த சட்டங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.” என்றார்.
இப்படி மாறுபட்ட விவசாயிகள் போராட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில், மத்திய அரசு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.