பிரதமர் நரேந்திர மோடியின் 'மனதில் இருந்து ஒரு குரல்' ரேடியோ நிகழ்ச்சியில் அதிக முறை தமிழ்நாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
நாட்டு மக்களுடன் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என அழைக்கப்படும் 'மனதில் இருந்து ஒரு குரல்' ரேடியோ நிகழ்ச்சி மூலமாக பேசி வருகிறார். இதன் நூறாவது நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு சார்பாக இதனை கொண்டாடுவதற்கான பல முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த நிகழ்ச்சி குறித்த பல சுவாரசியமான தகவல்களும் கிடைத்திருக்கிறது. அதில் தமிழ்நாடு மாநிலம் குறித்துதான் இந்த நூறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி அதிக முறை குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் உள்ளிட்டவை குறித்தும், தமிழ் மொழி தெரியாதது குறித்த தனது வருத்தங்களையும் பலமுறை பிரதமர் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனையாளர்கள், முக்கியமான சமூக பணிகளை செய்யக்கூடியவர்கள் என பலர் குறித்தும் பல தருணங்களில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
குறிப்பாக,
திருப்பூர் மாவட்டத்தில் தாயம்மாள் என்பவர் பள்ளிக்கூட கட்டுமானவர்களுக்கு தனது சேமிப்பு பணத்தினை வழங்கியது, ’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற திட்டம் குறித்தும்,
தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் எடுத்த முயற்சிகள் சென்னையை சேர்ந்த சுசித்ரா என்ற பெண் எடுத்த முயற்சிகள் குறித்தும்,
கடலூரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு 175க்கும் அதிகமான குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியது குறித்தும்,
வேலூர் மாவட்டத்தில் மாசடைந்த நீர் நிலைகளை பெண்கள் குழு தூய்மைப்படுத்தியது குறித்தும்,
சிவகங்கை மாவட்டத்தில் கழிவுப் பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரித்த குழுவினர் குறித்தும் என பல தருணங்களில் பலர் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயர் சூட்டியது, காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம், குஜராத்தில் நடைபெற்ற சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான வில்லுப்பாட்டு, தாமிரபரணி ஆற்றின் கரையில் நடைபெறும் புஷ்கரம் திருவிழா என பல முக்கிய நிகழ்வுகளையும் தனது உரையின் போது பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.
உத்திரமேரூர் கல்வெட்டுகள் போன்ற பழங்கால இடங்கள் குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, சுனாமி பாதிப்பு நினைவு நாள், தமிழ்நாட்டின் பல்வேறு இயற்கை சீற்றங்களின் போது ஏற்பட்ட பாதிப்புகள், அதிலிருந்து தமிழ்நாடு மீண்டது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களையும் தருணங்களையும் தனது இந்த ரேடியோ நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.