மணிப்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி, இன்று (ஆகஸ்ட் 10) பதிலளித்தார். இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின்போது மக்களவையில், ஒரு மணி நேரத்திற்கும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி, தனது பதிலுரையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நீண்ட நேரமாக விவாதிக்கமால் இருப்பதைக் கண்டித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவ்வப்போது ’மணிப்பூர், மணிப்பூர்’ என்று கோஷமிட்டனர். இந்தக் கோஷங்களுக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (ஒன்றரை மணி நேரம் கழித்து) வெளிநடப்பு செய்தனர். ஆனால், அவர்கள் வெளியேறிய பின்பு மணிப்பூர் பற்றிப் பேசினார்.
அவர், “மணிப்பூரை பற்றி நான் பேசுவதை கேட்கும் தைரியம் எதிர்கட்சிகளுக்கு இல்லை. உண்மைகளை நான் அவையில் அடுக்கியதால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமைச்சர் அமித்ஷா நேற்று (ஆகஸ்ட் 9) விரிவான விவரங்களை அளித்துள்ளார். அமித்ஷா வெளியிட்ட விவரங்களைக் கண்டபிறகு, மக்களுக்கு எதிர்க்கட்சிகள் செய்த பாவங்கள் தெரியவந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் அமித்ஷா மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். உயர்நீதிமன்றத்தின் ஓர் உத்தரவுதான் மிகப்பெரிய வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளது.
மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்கின்றன. மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார். மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது தலையாய பணி. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம்.
மணிப்பூரின் தற்போதைய சூழலுக்கு காங்கிரஸின் அரசியலே காரணம். வடகிழக்கு மாநிலங்களை நேரு புறக்கணித்ததால் அதன் விளைவுகளை தற்போது அனுபவிக்கிறோம்” என்றார்.
இதையும் படிக்க: ”போருக்கு ஆயத்தமாகுங்கள்” - அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு