நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாம் நாள் விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.
மூன்றாம் நாளான இன்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி வருகிறார். அதில், “அவையில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களில் சிலருடைய பேச்சுக்களை நானே நேரடியாக கேட்டேன்.
எங்கள் மீது நம்பிக்கையை வைத்த நாட்டு மக்களுக்கு இன்று நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2018 ஆம் ஆண்டும் எதிர்க்கட்சிகள் எனது தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். நான் ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர்கள் மீண்டும் இதை செய்வார்கள் என சரியாக கணித்திருந்தேன். எனது கணிப்பு இன்று உண்மையாகிவிட்டது.
மக்களுக்கு எதிர்க்கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் எங்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டும் எங்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது. அதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். வரும் 2024 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியும் பாஜகவும் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்து மீண்டும் ஆட்சிக்கு வரும்.
தற்பொழுது நடத்தப்படும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்கள் மீதான நம்பிக்கையை நிரூபிப்பதற்கு அல்ல. இது உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கானது. இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை உண்மையில் நான் கடவுளுடைய ஆசிர்வாதமாகத் தான் பார்க்கிறேன்” எனக் கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசி வருகிறார்.