ரஷ்யா சென்று சேர்ந்த பிரதர் நரேந்திர மோடியை அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மேண்டொரோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பின்னர் தலைநகர் மாஸ்கோவுக்கு வெளியே அமைந்துள்ள ரஷ்ய அதிபரின் இல்லத்தில் பிரதமர் மோடியும், அதிபர ;விளாடிமிர் புதினும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், மோடி மீண்டும் தேர்வானது ஒரு விபத்தல்ல மாறாக அவரது பல ஆண்டு உழைப்பின் பலன் என பாராட்டினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட கருத்தாக்கங்கள் இருப்பதாகவும், அவர் மிகவும் சுறுசுறுப்பானவராக, இந்திய மக்களுக்கு தேவையான பலன்களை அடைய கூடியவராக இருப்பதாகவும், அவை வெளிப்படையாக தெரிவதாகவும் புதின் புகழாரம் சூட்டினார்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்குவதாக புதின் தெரிவித்ததாக ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்திய மக்கள் தாய்த் திருநாட்டிற்கு சேவையாற்ற தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய மக்களுக்கு சேவையாற்றுவதற்கே மோடி தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பதாக புதின் கூற அதை அமோதித்த பிரதமர் மோடி, தமக்கு ஒரே குறிக்கோள் தமது நாடும், மக்களும் தான் என குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் ரஷ்ய அதிபரின் இல்லத்தை சுற்றிப் பார்த்தனர். புதின் பிரதமர் நரேந்திர மோடியை மின்சார காரில் அழைத்துச் சென்றார். பெரும்பாலும் இருவரும் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் பேசிக்கொண்டனர். இருப்பினும் காரைவிட்டு இருவரும் பூங்காவை நோக்கிச் செல்லும்போது யாரும் இல்லாமல் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டனர். தம்மை இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்த ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மோடி தமது எக்ஸ் தள பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர தமது பதிவில் கூறியுள்ளார்.
இந்தியா -ரஷ்யா உச்சி மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. உக்ரைன் போர், இருநாட்டு உறவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஒப்பந்தங்களை உறுதி செய்து இந்தியா - ரஷ்யா உறவை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து உரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களை இறக்குமதி செய்வது, மற்றும் இந்தியாவிலிருந்து மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ரஷ்யாவில் இருந்து இந்திய படைகளுக்கு முக்கிய தளவாடங்களை இறக்குமதி செய்வதும் பேச்சுவார்த்தையின் முக்கிய பகுதியாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர். புதினுடனான பேச்சு வார்த்தைக்குப் பிறகு இந்தியா வம்சாவளியினரை சந்தித்தும் பிரதமர் கலந்துரையாட இருக்கிறார். இதனையடுத்து, 2 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து ரஷ்யாவில் இருந்து ஆஸ்திரியாவிற்கு செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தொடர்ந்து, 3 நாட்கள் பயணத்திற்கு பிறகு பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.