அந்தமான் நிக்கோபார் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு சுதந்திர போராட்ட காலத்தின் போது வீர் சவார்கர் அடைக்கப்பட்ட சிறையினை பார்வையிட்டார்.
அந்தமான் சென்ற பிரதமருக்கு பழங்குடி மக்கள் பாரம்பரிய முறையில் மாலைகள் அணிவித்து வரவேற்றனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அந்தமானின் பிரசித்தி பெற்ற சிறைச்சாலையையும் பிரதமர் பார்வையிட்டார். அங்கு வீர் சவார்க்கர் சிறைக்கு சென்ற பிரதமர், தரையில் அமர்ந்து வீர் சவார்க்கர் படத்துக்கு மரியாதை செய்தார். இந்தப் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், “செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் வீர் சவார்க்கரும் ஒருவர். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்றேன். கடுமையான சிறைவாசமும் வீர் சவார்க்கரின் வீரியத்தை குறைக்கவில்லை. சுதந்திரமான இந்தியாவுக்காக சிறையில் இருந்து கொண்டே தொடர்ச்சியாக பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அந்தமானில் உரையாற்றிய பிரதமர், “நாட்டின் எந்த ஒரு பகுதியையும் விட்டுவைக்காமல் அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்காகவும் தமது அரசு பாடுபட்டு வருகிறது. தொலைதூர பகுதியில் இருந்தாலும் அந்தமானில் வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.
செல்லுலார் சிறையானது 1896 ஆண்டு தொடங்கி 1906 வரை கட்டப்பட்டது. பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட யோகேந்திர சுக்லா, படுகேஸ்வர் தத், பஸ்ல்-இல்-ஹக் கைரபாடி மற்றும் சச்சிந்திர நாத் சன்யாள் அந்தச் சிறையில் அடைக்கப்பட்டனர். வீர் சவார்க்கர் 1911இல் செல்லுலர் சிறையில் இருந்தார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி நிகோபார் தீவில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.