ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் அது யூனியன் பிரதேசமாகவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதன் பின் காஷ்மீர் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் என்ன பேசப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. எனினும் காஷ்மீரில் தேர்தல் நடத்துவது, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து இச்சந்திப்பில் பேசப்படலாம் எனத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் காஷ்மீர் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி தமது பிரதிநிதிகளை அனுப்ப இணங்கியுள்ளது. இதையடுத்து முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.