ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா: பிரதமர் மோடி நன்றி

ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா: பிரதமர் மோடி நன்றி
ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா: பிரதமர் மோடி நன்றி
Published on

ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகியதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன. 2020 - 21 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினராக 8 வது முறையாக இந்தியா தேர்வாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா இப்பொறுப்பில் நீடிக்கும்.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய பொறுப்பில் இருக்கும். இந்தியா தவிர, அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தங்களது பிராந்தியங்களிலிருந்து, ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளன.

 இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி " ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியா உறுப்பினராக தேர்வானதற்கு உலகளாவிய சமூகம் காட்டியுள்ள பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா இணைந்து செயல்படும்" என மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com