பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்!
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் சுதந்திர தின உரை பலதரப்பட்ட வாக்காளர்களையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என பிரதமர் தனது உரையில் கூறியிருந்தார். தச்சர்கள், பொற்கொல்லர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத்தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள் போன்ற திறன் சார்ந்த பாரம்பரிய பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான விஸ்வகர்மா யோஜனா திட்டம் வரும் மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கூறியுள்ளார். இது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை கவரும் அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போரின் சொந்தவீட்டு கனவை நனவாக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்கிக் கடன் சலுகை வகையில் இத்திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.