'BRICS' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஒன்றுகூடி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அதேவேளையில் மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசி, எல்லை பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “நெடுஞ்சாலைகள் விரைவான வேகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில், இந்தியா பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற உள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையாகவும் இந்தியா மாறும். அதில் ஒரு பகுதியாக இருக்க உங்களை அழைக்கிறேன். இந்தியாவின் வருகை, பரஸ்பர நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும், குறிப்பாக உலகளாவிய தெற்கில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். பொதுத்துறை விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக மிஷன் முறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா, பொது சேவை வழங்கல் மற்றும் நல்ல நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இன்று இந்தியாவில் UPI அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும், அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி மற்றும் மற்றும் திவால் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் தனியாருக்குத் திறக்கப்பட்டுள்ளன. இன்று தெருவோர வியாபாரிகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைவராலும் UPI பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில், நமது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் முக்கிய பங்காற்றியுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்ற போது, உலகம் பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வந்தது. அந்த நேரத்தில், உலகப் பொருளாதாரத்தின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக பிரிக்ஸ் உருவானது. கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில், பதற்றங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. அத்தகைய நேரத்தில் BRICS இன் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த நெருக்கடி நிலையை இந்தியாவும் உதவியது” என்றார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்கள் உரையாடலில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களும் வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக, ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியா தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த சூழலில், பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, மீண்டும் சுமுக உறவை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி மேற்கொள்வார் எனவும் கருதப்படுகிறது.