நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இரண்டாம் முறையாக பெங்களூருவில் கூடியுள்ளது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பாட்னாவில் எதிர்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருந்தார். அக்கூட்டத்தில் 15 கட்சிகள் கலந்து கொண்டன.
இந்நிலையில் காங்கிரஸ் சமீபத்தில் ஆட்சி அமைத்த கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையில் இரண்டாவது முறையாக எதிர்கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்றும் இன்றும் நடந்து வருகின்றன. இக்கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முன்னதாக பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை பகீரங்கமாக அறிவித்தால் மட்டுமே எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இவ்வேளையில் கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் கட்சி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி 2-வது எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்தது. இப்படியாக இன்று சமரசம் ஏற்பட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருபுறம் பெங்களூருவில் கூட்டம் நடத்த, இன்னொருபுறம் ஆளும் பாஜக அரசும் தனது கூட்டணிக் கட்சிகளுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
இது குறித்து பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்பதை 38 கட்சிகள் உறுதி செய்துள்ளன” என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர்ட் பிளேர் விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா இன்று நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, “பெங்களூருவில் நேற்றும் இன்றும் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டம் ஊழல்வாதிகளை பாதுகாக்க ஏற்படுத்தப்படும் கூட்டம். ஊழல்களை ஊக்குவிக்க பெங்களூருவில் கூடுகிறார்கள். சில அரசியல் கட்சிகள் குடும்பத்திற்காக அரசியல் செய்து வருகிறது. குடும்பத்தால் குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் கொள்கை. முன்னேறி செல்ல வேண்டிய இந்தியா தற்போது பல்வேறு இடங்களில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிதான். 9 ஆண்டுகளில் பழைய அரசாங்கங்களின் தவறுகளை திருத்தியுள்ளோம்.
ஊழல் வழக்குகளை சந்தித்தாலும் திமுக நல்ல கட்சி என்ற நற்சான்றை எதிர்கட்சிகள் வழங்குகின்றன. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றன” என கூறினார்