டிஜிட்டல் கைது எனப்படும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி மனதின் குரல் என்ற பெயரில் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார். இதில் பேசிய அவர், “டிஜிட்டல் கைது குற்றங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநில அரசுகளுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் பொதுமக்களும் இவ்விவகாரத்தில் உஷாராக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
மேலும், “விசாரணை அமைப்புகள் என கூறிக்கொண்டு அப்பாவிகளை தங்கள் வலையில் சிக்க வைக்கும் மோசடிகள் நடைபெறுகிறது. விசாரணை அமைப்புகள் பொது மக்களை தொலைபேசியிலோ அல்லது வீடியோ காலிலோ அழைக்க மாட்டார்கள்” என விளக்கினார்.
இத்துடன் “தாங்கள் குறிவைக்கப்படுவதாக பொதுமக்கள் உணர்ந்தால் நில், சிந்தி, செயல்படு என்ற வகையில் பிரச்னையை கையாள வேண்டும். மேலும் 1930 என்ற சைபர் உதவி எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம்” என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.